சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை : பொதுமக்கள் அச்சம்

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-07 05:29 GMT

கொள்ளை மாதிரி படம்.


சித்தோடு அருகேயுள்ள நடுப்பாளையம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் அர்த்தனாரி மகன் குமரவேல் (53). இவர், சித்தோடு ஆவின் பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமலதாவுக்கும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவபிரகாசத்துக்கும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மறு அழைப்புக்காக நேற்று முன்தினம் குமரவேலும், அவரது மனைவியும் புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ, பெட்டி ஆகியவை திறந்து கிடந்ததோடு, துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும், பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பிரேஸ்லெட், மோதிரம், கம்மல் உள்ளிட்ட பத்தரைப் பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோன்று, வீட்டின் மேல் மாடி வீட்டின் அறைக்கதவும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அங்கு, பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் பூட்டை உடைத்து இத்துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து, குமரவேல் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News