சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.;
ஊரடங்கு காரணமாக, ஈரோடு உள்ளிட்ட அதிக தொற்று பரவல் உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கடத்தி கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக, போலீசார் தொடர்ந்து வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முற்பட்டனர். ஆனால் காரில் வந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும், காரை ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து காரில் போலீசார் சோதனையிட்டபோது, கர்நாடகாவில் இருந்து 1171 மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிககப்பட்டது. மேலும் காரில் வந்தவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த முன்னாள் அரசு வழக்குரைஞர் பரமேஸ்வரன் -51, என்பதும் வாகனத்தை ஓட்டி வந்தவர் சிறுவலூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் கடத்தி வந்த 1171 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.