ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.;
சிக்குன்சேபாளையம் கிராமத்தில் நடைபெற்ற தேரோட்டம்.
தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள கேர்மாளம் சிக்குன்சேபாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெடேருத்ரசாமி, கும் பேஸ்வரசாமி, மாதேஸ்வரசாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. மலைக் கிராம மக்களின் காவல் தெய்வமாக இந்த கோவில்கள் விளங்குகிறது.
இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி தீபாராதனையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக சுமார் 30 அடி உயரமுள்ள தேரில் சாமி உற்சவர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முன்பு இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடியபடி வந்தார்கள். தேர் கோவிலில் நிலை சேர்ந்ததும் ஜெடேருத்ரசாமி, கும்பேஸ்வரசாமி, மாதேஸ்வரசாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கடம்பூர், கேர்மாளம், தாளவாடி, ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆசனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.