காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: ராகி பயிர்கள் சேதம்
தாளவாடி அருகே வனப்பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் தாளவாடியை அடுத்த சிக்கள்ளி, பாலப்படுக்கை, இக்களூர் மற்றும் வனப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது
.இதனால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதில் 3 கிராமங்களில் உள்ள தோட்டங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள ராகி பயிர்கள் சாய்ந்து நாசம் ஆனது. மேலும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ரோட்டில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மழை நீர் வடிந்த பிறகே வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து சென்றன. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது