சத்தியமங்கலம் அடுத்த மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் தவிப்பு
நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு சத்தியமங்கலத்தில் இருந்து செல்ல வேண்டுமென்றால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக 25 கிலோமீட்டர் தொலைவு கடந்து செல்ல வேண்டும்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாயாற்றில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றின் மறுகரைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்த நிலையில் சத்தியமங்கலத்திலிருந்து தெங்குமரஹாடா கிராமத்தில் தக்காளி பாரம் ஏற்றுவதற்காக சென்ற பிக்கப் வேன் ஒன்று மாயாற்றை கடக்க முற்பட்டபோது எதிர்பாராவிதமாக வாகனம் தண்ணீரில் இழுத்துச் சென்றது. இதை சுதாரித்துக்கொண்ட வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை இயக்கி மறு கரை ஓரம் ஒதுக்கி நிறுத்தினார். இதைக் கண்டும் ஆபத்தை உணராமல் மாயாற்றைக் கடக்க பின்தொடர்ந்து வந்த சொகுசு கார் மற்றும் மற்றொரு பிக்கப் வேன் இரண்டும் வெள்ளப் பெருக்கில் சிக்கி கரை ஒதுங்கியது.
இதை கண்ட கரையோரம் நின்றிருந்த வாகன ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் வெள்ளத்தில் சிக்கியிருந்த வாகனங்களை கரையோரம் இருந்த மரத்தில் கயிற்றைக் கட்டி வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்வதை தடுத்து நிறுத்தினார். மாயாற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.