புஞ்சை புளியம்பட்டியில் பெண் வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

புஞ்சை புளியம்பட்டியில் வங்கி பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-10-21 09:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு மஞ்சுபார்கவி (26), வித்யபாரதி (24) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமூர்த்தி விபத்தில் இறந்து விட்டார். மூத்த மகள் மஞ்சுபார்கவிக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் வித்யபாரதி சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வித்யபாரதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் வேலையை விட்டுவிட்டு புளியம்பட்டிக்கு வந்து விட்டார். வீட்டில் இருந்து வந்த அவர் வேலைக்கு செல்ல முடியாததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதற்கு அவரது தாயார் பொன்மணி திருமணத்துக்கு பின்பு வேலைக்கு செல்லலாம் என ஆறுதல் கூறி வந்தார்.நேற்று பொன்மணி தனது மூத்த மகள் மஞ்சுபார்கவியுடன் சத்தியமங்கலத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் வித்யபாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வித்யபாரதியை மீட்டு புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் வித்யபாரதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவரது உடலை புளியம்பட்டி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News