பவானிசாகர் பகுதியில் யானை தாக்கியதில் பெண் படுகாயம்

பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில், யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த பெண் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Update: 2021-10-26 00:45 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சீரங்கராயன்கரடு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜீரோ பாயிண்ட் மணல் மேட்டில் யானைகள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். மணல்மேட்டில் 40 மீனவக் குடும்பங்கள் உள்ளன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் மீன் பிடிப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. மீனவர்கள் பரிசல், மீன் வலைகளின் பாரமரிப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மயிலாள் (50) என்பவர்,  மீன் வலையை எடுக்க திங்கள்கிழமை சென்றுள்ளார். அப்போது, எதிரே தண்ணீர் குடிக்க வந்த யானையைப் பார்த்து மயிலாள் ஓடியுள்ளார். ஆனால், வேகமாக வந்த யானை மயிலாளை தூக்கி வீசியது. இதனைப் பார்த்த மீனவர்கள் சப்தம் போட்டு யானையை வனப் பகுதிக்குள் துரத்தினர்.

அங்கிருந்த மீனவர்கள், மயிலாளை மீட்டு,  108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர்  மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தகவலறிந்த பவானிசாகர் வனத்துறையினர,  யானை மீண்டும்  மீனவர் குடியிருப்புக்குள் வராதபடி வனப் பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

Similar News