ஆசனூர் அருகே லாரி மீது ஏறிய டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே லாரி மீது ஏறிய டிரைவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
விபத்துக்குள்ளான லாரி.
கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து மர பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலத்துக்கு புறப்பட்டது. லாரியை குடகு மாவட்டம், கூடுமங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சாகர் (22) என்பவரும் உடன் வந்தார்.
லாரி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற இடத்தில் வந்தது. இந்த பகுதிகளில் மழை பெய்து இருந்ததால் அந்த பகுதியில் உள்ள மண்ணில் லாரியின் பின்பக்க சக்கரம் புதைந்தது. அதனால் லாரியை மஞ்சுநாதனால் தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதுகுறித்து மஞ்சுநாதன் லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். லாரி உரிமையாளர் 3 பேரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். லாரியை மீட்க கிரேன் அழைத்து வருவதாக உரிமையாளர் மற்றும் அவருடன் வந்த 3 பேர் சென்று விட்டனர்.
மஞ்சுநாதன், சாகர் மட்டும் லாரியில் இருந்தனர். இதனையடுத்து பாரம் தாங்காமல் சக்கரம் மண்ணில் இறங்கவே, லாரியின் பாரத்தைக் குறைக்கும் வகையில் டிரைவர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறினார். மரக்கட்டைகளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சித்தார். அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பி மீது மஞ்சுநாதன் கைப்பட்டது. இதனால் மஞ்சுநாதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மஞ்சுநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.