பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,648 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.;
ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று அதிகாலை முதல் பவானிசாகர் அணைக்கு வர தொடங்கியது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7648 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக 2300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.