கடம்பூரில் கோவிலை சேதப்படுத்திய 3 பேர் கைது
சத்தியமங்கலம் கடம்பூர் பகுதியில் கோவிலை சேதப்படுத்திய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கம்பத்ராயன் கிரி பெருமாள் கோவிலில், மதுபோதையில் நான்கு பேர் கும்பல், கோவில் சிலையை அவமதித்து, வேல் கம்புகளை எடுத்து ஆட்டம் போட்டனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாலிபர்களை கைது செய்யக்கோரி, கடம்பூரில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பசுவனாபுரம் கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் மீது, கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வடிவேல் என்பவரை கைது செய்த நிலையில் மற்ற மூவரை கைது செய்யாமல், மெத்தனம் காட்டினர். இதனால் கடம்பூரில் நேற்று முன்தினம், மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி., சசிமோகன் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இந்நிலையில் பசுவனாபுரம் கிராமத்தை சேர்ந்த டேவிட் 29, ராகுல் 22, நாகேந்திரன் 22, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான நான்கு பேரும் எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் நான்கு பேரையும் அடைத்தனர்.