கடம்பூர் மலைப்பகுதியில் கலப்பட உரம் விற்பனை? விவசாயிகள் அதிர்ச்சி
கடம்பூர் மலைப்பகுதியில், கடையில் வாங்கிய உரத்தில் கலப்படம் என, விவசாயிகள் புகார் அளித்தனர்.;
வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டு வந்த விவசாயிகள்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் குச்சிக்கிழங்கு, உருளை கிழங்கு, சோளம், கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார்கள். கடம்பூரை சுற்றியுள்ள காடகநல்லி, கரளியம், இருட்டிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உரம் வாங்கி போட்டுள்ளனர்.
ஆனால், 3 மாதங்கள் கடந்தும் முறையான விளைச்சல் இல்லை. இதனால் சில விவசாயிகள் தாங்கள் வாங்கிய உரத்தை தண்ணீரில் கரைத்து பார்த்தார்கள். அதில் இருந்து மண் தனியாக பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. உரத்தில் அதிக அளவில் மண் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளை சந்தித்து இது குறித்து புகார் மனு அளித்தார்கள்.
அந்த மனுவில் விவசாயிகள் கூறியிருப்பதாவது: கடையில் இருந்து வாங்கிய உரத்தை தண்ணீரில் கரைத்தால் கல், மண் மட்டும் தனியே பிரிந்து வருகிறது. எனவே உரத்தில் கலப்படம் உள்ளதாக சந்தேகிக்கிறோம். கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.