92 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92 அடியை நெருங்கி வருகிறது.
பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92 அடியை நெருங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இன்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19,638 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,916 கன அடியாக குறைந்தது.
அதேசமயம், 105 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 92 அடியை நெருங்கி வருகிறது. தற்போது, 91.28 அடியை எட்டியது. அதேபோல், நீர் இருப்பு 22.42 டிஎம்சியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,305 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.