பவானி குச்சிப்பை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: வேலைநிறுத்தம் வாபஸ்

பவானியில், குச்சிப்பை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதால், வேலை நிறுத்தை கைவிட்டு இன்று பணிக்கு திரும்புகின்றனர்.

Update: 2021-10-13 01:15 GMT

பவானி தாலுகா அலுவலகத்தில்,  கூலி உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள், துணிக்கடைகளில் பயன்படுத்தப்படும் கட்டப்பை, குச்சிப்பை, சுத்துப்பட்டி பை உள்பட 6-க்கும் மேற்பட்ட ரகங்களில் பைகளை தைத்துக்கொடுக்கின்றனர். இந்த தையல் தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் குச்சிப்பை தையல் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று பவானி தாலுகா அலுவலகத்தில் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஏ.ஐ.டி.யு.சி. தரப்பில் டி.ஏ.மாதேஸ்வரன், வக்கீல் பாலமுருகன், தையல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சங்கீதா, கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன், குச்சிப்பை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எஸ்.கே.டி. பரமசிவம், எஸ்.கே.டி.செல்வம், சிவசண்முகம் உள்பட 10-க்கும் மேற்பட்டோரும், முகவர்கள் தரப்பில் மோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்,  ஒவ்வொரு விதமான பைகளுக்கும் தலா 30 காசு கூலி உயர்வு வழங்குவதாக உடன்பாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, இன்று (புதன்கிழமை) முதல் பணிக்கு  திரும்புவதாக, தையல் தொழிலாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News