தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம் - பவானியில் பரபரப்பு!
பவானியில் தடுப்பூசி மையத்தில், வேண்டப்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவதாகக்கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.;
கொரோனா 2-ம் அலையால் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள, தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையத்து கடந்த சனிக்கிழமை ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து, நேற்றுமுதல் தடுப்பூசிகள் போடும் பணி துவங்கப்பட்டது. அதன்படி, இரண்டாம் நாளான இன்று அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி போடும் இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போட்டு சென்றனர்.
இந்நிலையில், பவானி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுபு்பூசி முகாமில், டோக்கன் முறையில் தடுப்பூசி போடாமல் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கூறும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், டோக்கன் பெற்றவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தி டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.