ஈரோட்டில் 65 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கம்

ஈரோட்டில், 65 நாட்களுக்கு பிறகு முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் இயங்க தொடங்கின.

Update: 2021-07-20 11:15 GMT

கொரோனா தாக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பின்னர் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூர், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 50 சதவீத பணிகள் மட்டுமே ஒரு பஸ்சில் ஏற்ற வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பஸ்கள் இயங்கி வருகிறது. ஆனால் தனியார் பஸ்கள் சேவை தொடங்காமல் இருந்தது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 269 தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இதில் மாவட்டத்திற்குள் 40 பஸ்களும், வெளி மாவட்டத்திற்கு 229 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூர், சேலம், கோவை, திருப்பூர்,மேட்டூர் நாமக்கல், பழனி போன்ற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, 50 சதவித பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஈரோட்டில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தன. தற்போது அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால், ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி முதற்கட்டமாக 60 தனியார் பஸ்கள் இயங்கத் தொடங்கி உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் படிப்படியாக மற்ற பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்களுக்கு பிறகு ஈரோட்டில் தனியார் பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News