மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
பவானியில் 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா (24) கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். பூபதிராஜா 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில் பவானி அருகில் உள்ள சேர்வராயன்பாளையம் முருகன் கோவிலில் பூபதிராஜா அந்த மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சமூகநலத்துறை மைய நிர்வாகி சுபாஷினி, பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் பூபதிராஜா மற்றும் மாணவி இருவரையும் பிரித்து வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பவானி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பூபதிராஜாவை குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.