பவானி அருகே சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்தல் : 2 வாகனங்கள் பறிமுதல்
பவானி அருகே ரேசன் அரிசி கடத்திய இரண்டு சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி அருகே சித்தாரை அடுத்த பெரியாண்டிச்சி அம்மன் காலனி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக பவானி வட்ட வழங்கல் துறை அதிகாரி ராவுத்தருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி, நில வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.அப்போது அங்கு சரக்கு ஆட்டோ மற்றும் மினி லாரி ஆகியவற்றில் 50 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பிரித்து சோதனை செய்தனர். அதில் ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், யாரோ மர்மநபர்கள் கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு பவானியில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. மேலும் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாகனங்களின் உரிமையாளர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.