கைத்தறி ஜமுக்காள நெசவாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பவானி-அந்தியூர் சாலையில் கைத்தறி ஜமுக்காள நெசவாளர்கள் 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு உயர்த்திய கூலியை வழங்கக் கோரி பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர்கள் சங்கம் - ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தக்கு சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஏஐடியூசி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சின்னச்சாமி, சங்கச் செயலாளர் சித்தையன், இ. கம்யூ. கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.
கைத்தறி நெசவாளர்களின் சூழலை உணர்ந்த தமிழக அரசு அடிப்படைக் கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்வு வழங்குவதாக கைத்தறித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தது. ஆனால், இக்கூலிஉயர்வு இதுவரையில் கிடைக்காததால் நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, விரைவாக அரசு இக்கூலி உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும்.நெசவாளர்களுக்கான போனஸை தறிக்கூட உரிமையாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும். கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலை அழித்து வரும் சட்டவிரோத சோலாப்பூர் விசைத்தறி ஜமக்காளங்களை பறிமுதல் செய்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள ஜமக்காளங்களை கோ-ஆப்-டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
நெசவாளர்கள் மாதம் முழுவதும் நெய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்கிட வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.சங்கத் துணைத் தலைவர் ராசம்மாள், கைத்தறி சம்மேளன மாநில குழு உறுப்பினர் சுந்தரம், கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பூபதி, சங்கப் பொருளாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது