பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 65,200 கனஅடி தண்ணீர் திறப்பாீல் பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-20 23:30 GMT

பவானி காவிரி ஆற்றில் இருபுறமும் கரைகளை தொட்டபடி கரைபுரண்டு ஓடும் தண்ணீர்.

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. அணை முழுவதுமாக நிரம்பியுள்ளதால் 65 ஆயிரத்து 200 கனஅடியும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வெள்ளமெனப் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் நேற்று மாலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றை வந்தடைந்தது. இருபுறமும் கரைகளை தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் கரையோரத்தில் தாழ்வான இடமான சோமசுந்தரம், சீனிவாசபுரம், பழைய பஸ் நிலையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் பவானி நகராட்சி ஆணையாளர் லீமா சைமன் ஆகியோர் ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேடான பகுதிகளுக்கு வந்து தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News