அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 56). விவசாயியான இவர் தனது வீட்டு முன்பு முன்பு தென்னங்கீற்றால் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, அர்ஜுனனின் வீட்டிற்கு அருகில் இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. காற்றின் வேகத்தால் அருகிலிருந்த இவரது குடிசைக்கு வீட்டிற்கும் தீ பரவியது.
இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்குள், வீட்டில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது .ஒரு மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.