கோபி அருகே ஆற்றில் மூழ்கி பனியன் நிறுவன தொழிலாளி பலி
கோபிசெட்டிப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கிய பனியன் நிறுவன தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

கொண்டப்பன்நாயக்கன்பாளையத்தில் ஆற்றில் மூழ்கி பலியான இளங்கோ.
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் இளங்கோ(19). பனியன் நிறுவன தொழிலாளி. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை அருகே உள்ள கொண்டப்பன்நாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இளங்கோ சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இளங்கோ, அவருடைய சித்தப்பா மகன் சீனிவாசன், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் அர்ஜூனன், பாரதிக்குமார் ஆகியோருடன் கொடிவேரி பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.
இதில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளங்கோ தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அப்போது அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் இளங்கோவை தேடினர். அவர் கிடைக்காததையடுத்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இளங்கோவை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் இளங்கோவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.