பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா: முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு

Bannari Amman Temple Festival Meet ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-03-11 05:00 GMT

பண்ணாரி அம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

Bannari Amman Temple Festival Meet

பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதியில் உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இந்த நிலையில் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில் மண்டபத்தில் (சனிக்கிழமை) நடைபெற்றது.

அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், ஈரோடு மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பேசியதாவது, பக்தர்கள் குண்டத்தில் தீ மிதிக்க வரிசையில் வர தடுப்புகள் அமைக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும். கோவில் நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ மையங்கள் அமைக்க வேண்டும்.

சத்தியமங்கலம் - மைசூர் சாலை மற்றும் பண்ணாரி - பவானிசாகர் சாலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து வருகிற 25ம் தேதி மாலை முதல் 26ம் தேதி வரை நிறுத்த வேண்டும். எனவே, துறை வாரியாக செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் தீப்பிடிக்காத வகையில் பந்தல் அமைப்பதை பார்வையிட்ட ஆட்சியர், பாதுகாப்புப் பணிகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். இதில், சத்தியமங்கலம் வட்டாசியர் மாரிமுத்து, சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன். பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையாளர் மேனகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News