12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.98 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 2வது இடத்தைப் பிடித்து ஈரோடு மாவட்டம் சாதனை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஈரோடு மாவட்டம் 97.98 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 2வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.;

Update: 2025-05-08 04:50 GMT

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஈரோடு மாவட்டம் 97.98 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 2வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.

தமிழகத்தில் இன்று (மே 8) வியாழக்கிழமை 12ம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என  பள்ளிகள் உள்பட மெட்ரிக், தனியார் என மொத்தம் 222 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 10,403 மாணவர்கள், 11,876 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 279 பேர் எழுதினர்.

இதில், 10,113 மாணவர்கள், 11,716 மாணவிகள் என மொத்தம் 21,829 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.98 சதவீதமாகும். தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் தமிழக அளவில் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 13ம் இடம் ஈரோடு மாவட்டம் பெற்றது. தொடர்ந்து, கடந்த 2022 -23ம் கல்வியாண்டில் 96.98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8ம் இடமும், 2023-24ம் கல்வியாண்டில் 6 இடங்கள் முன்னேறி ஈரோடு மாவட்டம் 2ம் இடம் பெற்றது.

மேலும், கடந்த 2013 2014, 2015 2016 ஆண்டுகளில் மாநில அளவில் முதலிடமும், 2017 2018, 2018 2019, 2020 ஆண்டுகளில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று பாராட்டுகளை அள்ளிய ஈரோடு மாவட்டம் நடப்பு 2024-25 கல்வியாண்டில் 97.98 சதவீதத்துடன் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்து சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News