ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமல்
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.;
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 10ம் தேதி வேட்பு மனு தாக்கலும், 18ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜன.7) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஈரோடு கிழக்கில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.