அந்தியூரில் உலக சுற்றுச்சூழல் தின புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் எ.செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

Update: 2024-06-05 12:45 GMT

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

அந்தியூர் எ.செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட எ.செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நெகிழி பயன்பாடுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் கொசு உற்பத்தி முறைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலக் குறைவுகள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் மரண விகிதங்கள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

மேலும், பொது மக்களுக்கு புகையினால் ஏற்படும் விளைவுகளை புகைப்படம் மூலமாக விளக்க உரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில் ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தைச் சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவா, செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ திட்ட பெண் தன்னார்வலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News