கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

துண்டு சீட்டுகளில் குறிப்பெழுதி கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.1.27 லட்சம் ரூபாய் ரொக்க பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-14 16:15 GMT

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து துண்டு சீட்டுகளில் குறிப்பெழுதி கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தினை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென இன்று மாலை 6 மணிக்கு ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறையின் துணை ஆய்வு குழு அலுவலர் சாந்தி தலைமையிலான 6பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று, புதுப்பித்தல், அனுமதிச் சான்று பெறுவதற்கு அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இந்த தீடீர் சோதனை நடைபெற்றது .


இந்த சோதனையின்போது ஓட்டுனர் உரிமம், தகுதிசான்று, அனுமதி சான்று போன்ற ஆவணங்களை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க ஆவணங்களுடன் அலுவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து துண்டு சீட்டுகளில் குறிப் பெழுதி வைக்கப்பட்டிருந்த ரூ 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து வட்டாரபோக்குவரத்து அலுவலகத்திலிருந்த அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி முகவர்கள், புரோக்கர்கள் என 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முறையாக ஓட்டுனர் உரிமம் பெறப்பட்டதற்க்கான ஆவணங்கள் குறித்தும், வாகன சான்று, அனுமதி சான்று வழங்கியதற்கான கோப்புகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்ட பிறகும் வாகன ஓட்டிகள் மற்றும் பயிற்சி பள்ளி முகவர்கள்  மூலம்

ஒரே நாளில் 1 லட்சத்து 27 ஆயிரம் லஞ்சமாக வசூல் செய்துள்ள அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News