அந்தியூரில் பரிதாபம் : கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் பலி

அந்தியூர் சந்தையில் பயிறுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் 7பேர் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-07-19 04:00 GMT

அந்தியூரில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவ இடத்திற்கு எம்எல்ஏ வெங்கடாசலம் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று நடைபெற உள்ள வார்த்தைக்கு தட்டபயிரு, உளுந்து, பச்சபயிறு ஆகிய பயிறு வகைகளை விற்பனை செய்ய பர்கூர் மலைப் பகுதியிலிருந்து சித்தன் , மாதேவன் , சின்னபையன், ராஜேஷ், சிவமூர்த்தி, மகேந்திரன், சின்னச்சாமி ஆகிய 7பேர் நேற்றிரவு அந்தியூர் வந்துள்ளனர்.

பின்னர் அனைவரும் அந்தியூர் தேர் வீதியில் உள்ள பாதி இடிந்த நிலையில் இருந்த பழைய எலக்ட்ரிக்கல் கடையில் படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக நள்ளிரவில் கட்டிடம் இடிந்து அவர்கள் மீது சுவர்கள் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் இயநதிரத்தின் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இடுபாடுகளில் சிக்கிய 7 பேரில் சித்தன் , மாதேவன் , சின்னபையன் ஆகிய 3பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த ராஜேஷ், சிவமூர்த்தி, மகேந்திரன், ஆகிய மூன்று பேரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் சின்னச்சாமி என்பவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த பழைய கட்டிடத்தின் இடையே படுத்து உறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பயிர் வகைகளை விற்றுவிட்டு காலை ஊர் திரும்பலாம் என்று வந்த விவசாயிகள் எதிர்பாராத விதமாக கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News