பூலாம்பட்டி பகுதியில் வரிசையாக நடந்த திருட்டு சம்பவம்
பூலாம்பட்டி பகுதியில் பகல் நேர திருட்டு, போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடக்கிறது!";
பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 60 வயதான விவசாயி பூமலை வெள்ளிக்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க மோதிரம், ரொக்கம் ரூ.6,000 ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். இதேபோல், அவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் 56 வயதான விவசாயி சௌந்தரராஜன் தோட்டத்துக்குச் சென்றிருந்தபோதும், அவரது மனைவி ராசாத்தி வீட்டைப் பூட்டிவிட்டு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றிருந்தபோதும், அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பெட்டியிலிருந்த ரூ.3,500-ஐத் திருடிச் சென்றனர். அதே பகுதியைச் சேர்ந்த மீன் கடை ஊழியரான 32 வயது மாதேஷ், தனது தாயார் அம்பிகாவுடன் வீட்டைப் பூட்டிவிட்டு மீன் கடைக்கு வேலைக்குச் சென்ற நிலையில், அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பெட்டியிலிருந்த ரூ.10,000-ஐத் திருடிச் சென்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார், அப்பகுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு திருடர்களைத் தேடி வருகின்றனர்.