12 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய 3 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் காவல் நிலையம் அருகே, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் மறைத்து கொண்டு வந்த 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 36 முட்டைகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், தட்டகரை வனச்சரக அலுவலகம் அருகே மேற்கொண்ட வாகனச்சோதனையின் போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திய போலீசார், 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 65 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அவ்வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் தப்பிச்செல்ல வாகனத்தில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் பல்வந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இரு வேறு சம்பவங்களில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 12 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய டிரைவரை பர்கூர் போலீசார் தேடி வருகின்றனர்.