கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு : ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்கள் இயக்கம்!
கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்களின் இயக்கம் அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல், வரும் 21ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை ,சேலம் உள்பட பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே காய்கறி, மளிகைக்கடை இறைச்சிக்கடைகள், காலை முதல் மாலை வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றுமுதல், ஒரு வாரத்திற்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டாக்ஸி, ஆட்டோக்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாக்ஸியில் ஓட்டுனர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோவில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகளும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன், இன்று ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ டாக்ஸி இயங்கத் தொடங்கியது. இதைப்போல் வாகன பழுதுபார்க்கும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அவைகளும் செயல்படத் தொடங்கியது.
இதேபோல் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், மோட்டார் எந்திரம் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் மதியம் வரை பழுது பார்க்க அனுமதிக்கப்பட்டனர். வேளாண் உபகரணங்கள், பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கின. ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் 25 சதவீத ஊழியர்களுடன் பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.