உபரிநீர் வெளியேறும் பகுதிகளை அந்தியூர் எம்.எல்.ஏ., கலெக்டர்ஆய்வு
உபரி நீர் வெளியேறும் பகுதிகளை, ஈரோடு கலெக்டர், அந்தியூர் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள பெரிய ஏரி 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தொடர் மழை காரணமாக கெட்டிசமுத்திரம் மற்றும் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீராலும், அந்தியூர் பெரிய ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது.
ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வழிப்பாதைகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது எனவும், சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி ஆகியோர், நீர்வழி பாதைகளில் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களை, நேரில் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் நீர் வழிப்பாதை பகுதிகளான பெரியார் நகர், நேரு நகர், அண்ணாமடுவு இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ச்சியாக, அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை பார்வையிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியார் நகர், நேரு நகர் ஆகிய இடங்களில், ஜேசிபி எந்திரங்கள் மூலம், நீர் வழிப்பாதைகளில் அடைப்பு உள்ள இடங்களில் தூர்வாரும் பணிகளையும், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர். ஆய்வின் போது வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் என துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.