அந்தியூர் அருகே குழந்தை திருமணம்: மணமகன், பெற்றோர் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

அந்தியூர் அருகே, குழந்தை திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 5 கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-16 03:01 GMT

நம் நாட்டில்,  18 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பல இடங்களில் குழந்தைத் திருமணம் நடப்பதாக தகவல் வெளியானது, இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம், அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு, மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் 18 வயது குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவிருக்கும் தகவல் தெரிந்தால் உடனடியாக, 1098 சைல்டு ஹெல்ப் லைன், சமூக நலத்துறையின் உதவி எண் 181 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையத்தில், இரு தினங்களுக்கு முன்பு குழந்தை திருமணம் நடந்ததாக சைல்டு ஹெல்ப் லைன் எண்ணிற்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சைல்ட் லைன் உறுப்பினர் வைத்தீஸ்வரி மற்றும் மாவட்ட குழைந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆற்றுப்படுத்துநர் ஞானசேகர் மற்றும் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், முதற்கட்டமாக குழந்தை மற்றும் குழந்தையை திருமணம் செய்த பிரபாகரன் (32) ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தை திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மணமகன் பிரபாகரன், அவரது பெற்றோர்கள் தமிழரசன், மாரியம்மாள், குழந்தையின் பெற்றோர் என ஐந்து பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News