கிணற்றில் விழுந்த சிறுவன், காப்பற்ற குதித்த தந்தை :அந்தியூர் அருகே பரபரப்பு!
அந்தியூர் அருகே, கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனையும், காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தையையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மூலக்கடையிலிருந்து மந்தை செல்லும் வழியில் உள்ள சரலை தோட்டத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி மற்றும் பேபி தம்பதியினர். இவர்களுக்கு ராகவன் என்ற ஏழு வயது ஒரே மகன் உள்ளான்.
இந்நிலையில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுப்பிரமணி, மகன் ராகவனிடம், கட்டிங் பிளையர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். வீட்டில் இருந்து கட்டிங் பிளேயரை சுழற்றியபடியே எடுத்து வந்தபோது, கையிலிருந்து கட்டிங் பிளையர் தவறி அருகில் உள்ள கிணற்று திட்டில் விழுந்தது.
கீழே விழுந்த கட்டிங் பிளேயரை எட்டிப்பார்த்த சிறுவன் ராகவன், எதிர்பாராதவிதமாக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த சுப்பிரமணி, தண்ணீரில் தத்தளித்த மகனை காப்பாற்ற தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
ஆனால், இருவராலும் கிணற்றில் இருந்து மேலே வர முடியவில்லை; கிணற்றிற்குள்ளேயே சிக்கி தவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின், தந்தையையும் மகனையும் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர். இத்தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.