ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய ஆயக்கட்டுப் பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம், அந்தியூர் ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள வாய்க்கால்களில் நான்கு நாட்கள் வீதம் தண்ணீர் திறக்க ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று பவானி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முகமது சுலைமான், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திறக்கப்படும் இந்த நீரானது மொத்தம் மூன்று வாய்க்கால்களில், நான்கு நாட்கள் வீதம், 4 சுற்றுகளாக, 66 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வரட்டுப்பள்ளம் நீர்தேக்க பாசன சங்க தலைவர் நாகராஜா, செயலாளர் சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.