வாகன சோதனையில் ஒரு லட்சம் பணம் பறிமுதல்

அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-03-08 04:26 GMT

சட்டமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும்படை குழுக்களை அமைத்து, இரவு பகலாக ரோந்து பணியை முடுக்கிவிட்டுள்ளது.

இதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்தலையூர் பகுதியில் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கவுந்தப்பாடியில் இருந்து பிவிசி பைப் பாரம் ஏற்றிக்கொண்டு அந்தியூர் சென்று கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணம் இன்றி வேன் டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஒரு லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர், அந்தியூர் தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிவந்த அந்தியூர் காலனியைச் சேர்ந்த முருகனிடம், உரிய ஆவணத்தை ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News