பாஸ்ட்புட் கடையில் தாக்குதல்: காவலர் மாற்றம்
வெள்ளித்திருப்பூரில் பாஸ்ட்புட் கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 30). இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விக்ரம் கடந்த நான்கு வருடமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூரில், கொளத்தூர் ரோட்டில் பிரேம் என்ற பெயரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார்.
வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் ராஜீவ்குமார். தற்போது சட்டமன்ற தேர்தலை ஒட்டி அந்தியூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படையில் ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு ராஜீவ் குமார் விக்ரம் நடத்தும் பாஸ்ட்புட் கடைக்கு வந்து உள்ளார். பின்னர் கடையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இங்கு மது அருந்தக் கூடாது என்று விக்ரம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜீவ்குமார், பாஸ்ட்புட் கடையில் பெஞ்சில் உள்ள முட்டை உட்பட பொருட்களை சேதப் படுத்தியுள்ளார். மேலும் விக்ரம் மற்றும் அவரது மனைவி ரேணுகா இருவரையும் ராஜீவ்குமார் தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட விக்ரம் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து எஸ்.பி.தங்கதுரை விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் ராஜீவ்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.