பொதுமக்கள் சாலை மறியல்
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சின்னதம்பி பாளையம் ஊராட்சி தாசரியூர் பகுதியை சேர்ந்தவர் சிவா.(வயது-22) கூலித்தொழிலாளியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவா தனது அண்ணன் தினேஷ் உடன் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அந்தியூர் அருகேயுள்ள தாசரியூர் பிரிவு என்ற இடத்தில் சாலையில் வந்த போது முன்விரோதம் காரணமாக அருகில் உள்ள பனங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ், புலிமன்னன், சின்னத்துரை உள்ளிட்ட 13-பேர் சிவாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சிவாவின் தலை, வயிறு, கை-கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவர்கள் அறிவுறுத்தலில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிவா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, அந்தியூரில் இருந்து அத்தாணி, சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்கியவர்கள் மீது தனிப்படை அமைத்து கைது செய்யபடும் என்று உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைத் கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் உறுதி அளித்தது போல் தகராறில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2-மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.