ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 30 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வரும் மலையாளி இன மக்கள், அவரவர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மலையனூர், தாமரைக்கரை அருகே உள்ள மின்தாங்கி, கல்வாரை, கடை ஈரட்டி, கோயில் நத்தம் தொல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில், சுமார் 1500 குடும்பத்தைச் சேர்ந்த 6,000 மலையாளி இன மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளி இன சாதி சான்றிதழ் கேட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களது கோரிக்கைக்கு அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இம்மக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் வகையிலும், அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் வகையிலும், சாதிச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, மலையனூர், மின்தாங்கி, கடைஈரட்டி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மலையாளி மக்கள் இன்று தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.