ஈரோடு மாவட்டத்தில் உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமாக வனக்காப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பணியிட மாற்றம் காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாயார் ராஜம்மாள் உடன் அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள கணபதி காட்டூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே வனத்துறை அதிகாரிகளின் தொந்தரவினால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட கொம்பு தூக்கி மாரியம்மன் கோவில் வனப்பகுதியில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்தவர் சென்னம்பட்டி வனச்சரகம் தெற்கு தண்டா சரக வனக்காப்பாளர் பிரபாகரன் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் உடனடியாக பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் இறந்தவர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனின் செல்போனை ஆய்வு செய்த போது தற்கொலைக்கு முன்னதாக பேசிய வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது.
அதில் வனத்துறை அதிகாரிகள் தன்னை மிகவும் கொடுமைபடுத்தியதாகவும் இதனால் மிகுந்த மன வேதனையில் தான் உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.