ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளையம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாத காலத்துக்கும் மேலாக 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரின்றி கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்த நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் இது குறித்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் அந்தியூர் ஆப்பக்கூடல் சாலையில் வெள்ளையம்பாளையம் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீரின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் உடனடியாக பிரச்சனையை தீர்க்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள், பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தண்ணீர் பிரச்சனைக்கு இரு நாட்களில் தீர்வு காணப்படும் என கூறியதில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.