அந்தியூர் வாரச்சந்தை மேம்பாடு, கடைகள் அமைக்க பூமிபூஜை: எம்எல்ஏ பங்கேற்பு
அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வாரச்சந்தையை மேம்படுத்தல், கடைகள் உணவகங்கள் அமைத்தல் பணிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச்சந்தையில் கடைகள் மற்றும் உணவகம் அமைக்க வேண்டும் என அந்தியூர் வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது சம்பந்தமாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் நேரில் சென்று வியாபாரிகள் கோரிக்கை மனு வழங்கினர். இதையடுத்து, அந்தியூர் வாரச்சந்தையில் கடைகள் மற்றும் உணவகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இதற்கான பூமி பூஜையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பாண்டியம்மாள், அந்தியூர் பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், அந்தியூர் பேரூர் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி, கோஆப் டெக்சாஸ் மாநில இயக்குநர் ரமேஷ், ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம், அந்தியூர் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சன்ரைஸ் சிவக்குமார், அந்தியூர் பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .