அந்தியூர் மைக்கேல்பாளையத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ
அந்தியூர் அடுத்த சமத்துவபுரத்தில் 72 பயனாளிகளுக்கு வீட்டு பராமரிப்பு பணிக்காக தலா 50,000 ரூபாயை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சியில் 1998-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டு 100 வீடுகள் கட்டப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை, கழிவுநீர் வடிகால், சமுதாயக்கூடம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்தன.மேலும் வீடுகளின் மேற்கூரைகளும் வலுவிழந்து சேதம் அடைந்துள்ளன.
சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் அந்தியூர், சமத்துவபுரம் பகுதியில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கவும், சமுதாயக்கூடத்தை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் 36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.மேலும் அங்குள்ள 100 வீடுகளை புதுப்பிக்க தலா 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சமத்துவபுரத்தில் நடந்த புதிய தார்ச்சாலைக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், பணிகளை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 72 பயனாளிகளுக்கு வீட்டு பராமரிப்பிற்காக தலா 50,000 ரூபாயை வழங்கினார். மீதமுள்ள 28 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக பராமரிப்பு தொகை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.