துவரை விலை கட்டுபடியாகவில்லை: சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவரை பருப்பின் விலை கட்டுபடியாகவில்லை எனக் கூறி விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-15 05:00 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, தேங்காய்,தேங்காய் பருப்பு, துவரை உள்ளிட்ட பல்வேறு விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாரம் விற்பனைக்கூடத்திற்கு, அந்தியூரை சுற்றியுள்ள விவசாயிகள் சுமார் ஆயிரத்து 100 மூட்டைகள் துவரை பருப்பு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இன்றைய வர்த்தகத்தில், சுமார் 500 மூட்டைகள் துவரை பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு அதிகமாகவும், 300 மூட்டைகள் துவரை பருப்பு 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. இந்நிலையில், மீதமுள்ள 300க்கும் அதிகமான மூட்டைகள், 400 ரூபாயிலிருந்து 480 ரூபாய் வரை ஏலம் கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 500 ரூபாய்க்கு கீழ் விலை குறைவாக ஏலம் போனதால் பாதிக்கப்பட்ட துவரை விவசாயிகள், விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளரை சந்தித்து முறையீடு செய்தனர்.

மேலும், துவரை பருப்புக்கு அதிக விலை வழங்க வேண்டும் என்றும் மேற்பார்வையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால், ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் முன்பு, அத்தாணி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, கடந்த வாரம் 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரை பருப்பு, இந்த வாரம் 20 ரூபாய் குறைத்து வியாபாரிகள் ஏலம் கேட்பதாகவும், கமிசன் அடிப்படையில் விற்பனைக் கூட அதிகாரிகள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்றனர். இந்நிலையில், தகவலறிந்த பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News