ஈரோடு: தம்பதியை கொன்றவர்களை கைது செய்யாவிட்டால் சிவகிரியில் 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்; அண்ணாமலை அறிவிப்பு!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்த தம்பதி கொலையில் 2 வாரத்தில் கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் வரும் 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.;
சிவகிரி அருகே நடந்த தம்பதி கொலையில் 2 வாரத்தில் கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் வரும் 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று மாலை சிவகிரியில் பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது, சிவகிரியில் நடந்திருப்பது கொலையல்ல மிருகங்கள் நடத்திய வேட்டை, கொலை செய்யப்பட்டவர்கள் யாரோ அல்ல. நம்முடைய தாய், தந்தை போன்றவர்கள். பாக்கியம்மாள் காதில் இருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார்கள். வளையல்களை பறிக்க கையை வெட்டியுள்ளனர். இதுபோன்ற கோர சம்பவங்கள் கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், குப்பிச்சிபாளையம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்று தொடர்கிறது. இதில் ஈடுபட்ட கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பல்லடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டனர். அதை கண்டித்து பா.ஜனதா அப்போதே போராட்டம் நடத்தியது. இதுவரை கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை.
சிவகிரிக்கு இதுவரை பல நல்ல நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளேன். இப்போது வந்துள்ளது மனதை வருத்தமடைய செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதியின் பேரன், பேத்திகள் சம்பவம் நடப்பதற்கு முதல்நாளில் கூட வந்து தாத்தா, பாட்டியுடன் விடுமுறையை கழித்துள்ளனர். இப்போது அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்வது?.
வருகிற 19ம் தேதிக்குள் அதாவது இன்னும் 2 வாரங்கள் தமிழக காவல்துறைக்கு அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதியை கொலை செய்தவர்களை கைது செய்யவேண்டும். இல்லை என்றால் 20ம் தேதி முதல் சிவகிரியில் எனது தலைமையில் பா.ஜனதா கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.
தமிழக காவல்துறையால் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை என்றால் வழக்கை உடனே சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடவேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கை சி.பி.ஐ. நினைத்தால் எடுத்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தி.மு.க. அரசு செந்தில்பாலாஜிக்காக இதில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. தற்போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்தால்தான் வழக்கை சி.பி.ஐ. வசம் கொண்டு செல்ல முடியும்.
கொங்கு மண்டல மக்கள் தமிழக போலீசார் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் விரைந்து கொலையாளிகளை பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் 20ம் தேதி நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி உண்ணாவிரதம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.