அறச்சலூர் அருகே திருமண கோஷ்டியினர் வந்த கார் மோதி மூதாட்டி பலி: காரில் வந்த மணமகனின் பாட்டியும் உயிரிழந்த பரிதாபம்
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே மகனின் திருமணத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டதில் மூதாட்டி மற்றும் காரில் பயணம் செய்த மாப்பிள்ளையின் பாட்டி என இரண்டு பேர் உயிரிழந்தனர்.;
அறச்சலூர் அருகே மகனின் திருமணத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டதில் மூதாட்டி மற்றும் காரில் பயணம் செய்த மாப்பிள்ளையின் பாட்டி என இரண்டு பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சோங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (53) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (50). இவர்களது மகன் தினேஷ்குமார். கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தினேஷ்குமாருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று கொடுமுடியில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து எடுத்து திருமணத்தை முடித்துவிட்டு மணமக்களை தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துவிட்டு முருகேசன் அவரது மனைவி உமா மகேஸ்வரி மற்றும் தாய் சரஸ்வதி (70) ஆகிய மூன்று பேரும் காரில் கொடுமுடியில் இருந்து திருப்பூர் ஊத்துக்குளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அறச்சலூர் அடுத்த நடுப்பாளையம் அருகே செல்லும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த நடுப்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி பெரியம்மாள் (70) மீது மோதியது. இதில் மூதாட்டி பெரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேரும் காயம் அடைத்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மாப்பிள்ளையின் பாட்டி சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்தில் உயிரிழந்த நடுப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளின் உடலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனின் திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் மாப்பிள்ளையின் பாட்டி மற்றும் நடுப்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி பெரியம்மாள் ஆகிய இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.