பெருந்துறை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் பலி: பின்னால் வந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழந்தார். அப்போது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து அரசு பேருந்து மீது மோதி கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.;

Update: 2025-03-07 01:10 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கிணிப்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 77). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை பெருந்துறையை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் கள்ளியம்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்து குப்புசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் குப்புசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து பின்னால் வந்த ஆம்னி பேருந்தின் டிரைவர், அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டு உள்ளார். இதில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் இருந்த 25 பயணிகளில் 15 பேர் காயம் அடைந்தனர்.

உடனே, அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News