ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்த பெண்ணை கொலை செய்த முன்னாள் காதலன் கைது
ஒரே நேரத்தில் 2 பேருடன் காதலில் இருந்த கர்ப்பிணியை கழுத்து நெரித்து கொன்ற முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நசியனூர் ராயபாளையம் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சென்னியப்பன் வளர்மதி தம்பதியின் இளைய மகள் பிருந்தா (வயது 23). இவரும் ஈரோடு வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த முருகனின் மகன் கார்த்தி (வயது 24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பிருந்தாவின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டு பிருந்தாவின் வீட்டிலேயே வசித்து வந்தனர். கடந்த 24ம் தேதி பிருந்தாவின் பெற்றோர் தீபாவளிக்கு மொடக்குறிச்சியில் உள்ள தனது மூத்த மகள் மங்கையர்கரசி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பிருந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிருந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.விசாரணையில், பிருந்தாவை அவரது முன்னாள் காதலனான திண்டுக்கல் மாவட்டம் நந்தம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் அரவிந்த் (வயது 22) கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்த அரவிந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி பிருந்தா வசிக்கும் நெசவாளர் காலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வார். உறவினர் வீட்டில் உள்ள இளம் பெண்ணும், பிருந்தாவும் தோழிகள். இதன்மூலம் அரவிந்துக்கும், பிருந்தாவுக்கும் இடையே நட்பு உருவானது. ஏற்கனவே கார்த்தியை காதலித்து வந்திருந்தாலும் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு காதல் உருவானது. அரவிந்த் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் கார்த்தியை பிருந்தா திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 27ம் தேதி பிருந்தா வீட்டுக்கு அரவிந்த் வந்தார். அப்போது பிருந்தா மட்டும் வீட்டில் இருந்தார். . அப்போது பிருந்தாவிடம் 'நாம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடலாம் வா' என்று அரவிந்த் அழைத்தார். அப்போது தான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதால் வர முடியாது என்று பிருந்தா கூறினார். இதனையடுத்து நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா?' என்று அரவிந்த் கேட்டுள்ளார். "நான் தற்கொலை செய்ய முடியாது. வேண்டுமானால் என்னை கொலை செய்துவிட்டு நீங்கள் தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என்று பிருந்தா கூறியுள்ளார்.
இதனையடுத்து அரவிந்த் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவர் இறந்ததையடுத்து அரவிந்த் சென்னைக்கு ஓட்டம் பிடித்தார். பின்னர், பிருந்தாவின் செல்போன் எண்களை சோதனை செய்த போது அரவிந்த் சென்னையில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு செந்தில் குமார் ஆகியோரைக் கொண்ட தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று அங்கு ஓட்டலில் வேலை செய்த அரவிந்தை கைது ஈரோடு அழைத்து வந்தனர். பின்னர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.