அம்மாபேட்டை அருகே ஆலாம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆலாம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-11-18 01:15 GMT
அம்மாபேட்டை ஆலாம்பாளையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

அம்மாபேட்டை அருகே உள்ள ஆலாம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் ஆலாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு, பாதுகாப்பான குடிநீர் குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் அவை இலவசமாக கிடைக்கும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.செந்தில் ராஜா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாச ரகுபதி, தினேஷ்குமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக மார்பக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News