ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் செலவின கணக்குகள் தணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின கணக்குகளுக்கான தணிக்கை நடைபெற்றது.;

Update: 2025-03-07 00:50 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 தேர்தல் செலவின கணக்குகள் ஒத்திசைவு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின கணக்குகளுக்கான தணிக்கை நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேட்பாளர்கள் தலா ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வரையறை செய்யப்பட்டிருந்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 26 நாட்களுக்குள் வேட்பாளர்களின் செலவின கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மேலும், இந்த தேர்தல் செலவின கணக்கு தாக்கலுக்கான தணிக்கை 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவின கணக்குகள் தணிக்கை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ் குமார் ஜாங்கிட் முன்னிலை வகித்தார். இதில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவின கணக்குகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகமது குதுரத்துல்லா. வெங்கடராமன் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News