ஆப்பக்கூடல் பேரூராட்சி தலைவர் பதவியை திமுகவிடமிருந்து பறித்த அதிமுக
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சி தலைவர் தேர்வில், திமுக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தோற்கடித்து பேரூராட்சி தலைவராகியிருக்கிறார் அதிமுக வேட்பாளர் செல்வி.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சியில் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனால், அதிர்ச்சியடைந்த திமுகவினர் போராட்டத் தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 6, திமுக 5, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சீ.ரேவதி, அதிமுக சார்பில் எஸ்.செல்வி போட்டியிட்டனர். இதில், அதிமுக 8 வாக்குகளும், திமுக 7 வாக்குகளும் பெற்றன.
இதனால், அதிர்ச்சியடைந்த திமுகவினர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வி 8 வாக்குகள் பெற்றிருந்ததால் வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் ஹேமலதா அறிவித்தார். இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளரும், பவானி எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன் அதிமுகவினருக்கு இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். துணைத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.